அத்துடன் குறித்த பெண் வைத்திருந்த வைரஸ் நிறைந்த பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் (Palm) கடற்கரை பகுதியில் டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ (Mar-a-Lago ) பண்ணை வீடு உள்ளது. குறித்த பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் (Yujing Zhang ) கடந்த சனிக்கிழமை, நண்பகல் வேளையில் நுழைய முற்பட்டார்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த அவரிடம் சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டபோது, அந்தப்பெண் நீச்சல் குளத்தில் குளிக்க செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அவரோ எந்தவித நீச்சல் உடைகளையோ வைத்திருக்கவில்லை. மேலும் அவரது நடவடிக்கைகளிலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்தப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற, அதிகாரிகள் வரவேற்பாளரிடம் விசாரணை மேற்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்தப்பெண் ஐக்கிய தேசிய சீன அமெரிக்க கூட்டுறவு சங்கத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்துள்ளதாக, கூறியமை தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணையில் பொய் கூறியதால் அந்தப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்ததில், 2 சீன பாஸ்போர்ட்டுகள், வைரஸ் நிரம்பிய பென்டிரைவ், 4 ஸ்மார்ட் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பாஸ்போர்ட் சீன மொழியில் எழுதப்பட்டிருந்ததால், இரண்டாம் கட்டமாக வேறொரு இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கைதாகிய பெண் கூறுகையில், 'சீனாவைச் சேர்ந்த தன் நண்பர் சார்லஸ், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே உள்ள பொருளாதார தொடர்பு குறித்து அதிபரின் குடும்ப உறுப்பினரிடம் பேசுமாறு தன்னை அனுப்பி வைத்தார். இதற்காகவே தான் வந்தேன்' என வாக்கு மூலம் வழங்கியுள்ளார். அந்தப்பெண் அளித்த தகவல்களில் முரண்பாடு இருப்பதையடுத்து, அவர் பெயர் கூறிய சார்லஸ் என்பவர் குறித்து கடும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.