இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பதப்படுத்தி வைக்கப்பட்ட எலிகளின் உடலங்களை எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வேறு சில விலங்குகளின் உடலங்களும் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
எகிப்திலுள்ள சஹோகே என்னும் நகரத்தில் உள்ள கல்லறையில் இருந்து இந்த பதப்படுத்தப்பட்ட உடலங்கள் (மம்மி) மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு மனித மம்மிகளின் உடலங்களைச் சுற்றி, விலங்குகளின் உடலங்கள் நிறைந்து காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவை புதைக்கப்பட்டுள்ள அறையிலுள்ள சுவர் முழுவதிலும், இறுதிச் சடங்குகளைக் குறிக்கும் ஓவியங்கள் உள்ளன.
சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இக்கல்லறை, அப்போதைய எகிப்தின் உயரதிகாரியாக இருந்த டுட்டு மற்றும் அவரது மனைவிக்கான ஓய்வெடுக்கும் பகுதியாக பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலைவன பகுதியான இது, இனிவரும் காலங்களில் பல சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாக மிளிரும் என, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.