கங்கோ நாட்டில் (Congo) எபோலா வைரஸ் (Ebola virus) தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, கங்கோவில் மிகப் பெரிய பலியெடுப்பை எபோலா செய்திருந்த பின்னர், மீண்டும் எபோலாவின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ''கங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,041 பேருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தடுப்பூசிகள் மூலம் கிட்டதட்ட 70,000 பேருக்கு மேல் எபோலா பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய நகரகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் வகையில் அங்கு பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கை கூறுகின்றது. தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக கங்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கியிருந்தது. இதில் எபாலோ வைரஸ் பாதிப்பால் 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்போது 11,000 பேர் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.