காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக சென்ற ஒருவர், சிங்கங்களுக்கு இரையாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசியப் பூங்காவிற்கு சென்ற ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். குறித்த வன பூங்காவில் காண்டாமிருகங்களை சட்டவிரோதமாக வேட்டையாடி, அதன் கொம்புகளை கடத்தி விற்பனை செய்வது அதிக நாட்களாக நடைபெற்று வருகின்றது.
ஆசிய நாடுகளில் காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு அதிக பணம் கிடைக்கிறது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக குரூகர் தேசியப் பூங்காவுக்கு சென்றனர்.
குறித்த ஐவரில் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்ட நிலையில், யானையின் காலில் மிதிபட்டு பலியாகினர். இதன்போது அந்தப்பக்கம் வந்த சிங்கக் கூட்டம் ஒன்று அவரது உடலை இழுத்து சென்று தமது இரையாக்கி கொண்டன. குறித்த நபருடன் சேர்ந்து சென்ற ஏனைய நான்கு பேரும் அங்கிருந்து தப்பி சென்று, வனத்துறை அதிகாரிகளிடம் நடந்த விபரீதத்தை தெரிவித்தார்கள்.
கிடைத்த தகவலின் பிரகாரம் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, குறித்த நபரின் மண்டையோட்டை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்துள்ளது. அவரது உடல் முழுவதையும் சிங்கங்கள் தின்று விட்டு மண்டை ஓட்டை மட்டுமே மிச்சம் விட்டுகின்றன.