நேபாளத்தின் கியால்சன் (Gyalzen )சிகரத்தின் உச்சியினை 3 மலையேறும் வீரர்கள் முதன்முறையாக தொட்டு, சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு மலைகள் நேபாளத்தில் காணப்படுகின்றன. நேபாளத்தின் ஜுகால் ஹிமால் பகுதியில் 6,151 மீட்டர் உயரம் கொண்ட கியால்சன் சிகரம் உள்ளது. இந்த சிகரத்தின் உச்சியினை இதுவரை யாரும் தொட்டதில்லை. இந்த மலையின் உச்சியினை அடைவதற்கு கடந்த வெள்ளி கிழமை 6 பேர் கொண்ட குழு ஒன்று பயணத்தை ஆரம்பித்திருந்தது.
ஆனால், மழை பெய்தமை காரணமாக, மலையில் ஏறமுடியாமல் திணறிய 3 பேர், ஹெலிகப்டர் மூலம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து மாயா குருங், சர்மிளா தபா, மிலன் தமங் ஆகிய 3 மலையேறும் வீரர்கள் நேற்று முதன்முறையாக சிகரத்தின் உச்சியினை அடைந்து சாதனை படைத்துள்ளனர். குறித்த மலை சிகரத்தை முதன் முறையாக அடைந்த பெருமையை குறித்த மூவரும் பெறுகின்றார்கள்.
இதனிடையே, காத்மண்ட்டிலிருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் சிந்துபல்ஜோக் மாவட்டத்தில் உள்ள இந்த மலை, மலையேறும் வீரர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.