ஹொலிவூட் திரைப்படமான "அயன் மேன்" முதல் பாகம் 2008 ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரொபேர்ட் டவுனி ஜூனியர் தனது சம்பளத்தை 10 மில்லியன் டொலராக உயர்த்தினார். அத்துடன் "அவெஞ்சர்ஸ்" திரைப்படங்களில் தான் நடிப்பதற்கான சம்பளமாக 10 மில்லியன் டொலர்களை நேரடியாகப் பெற்றதோடு, படத்தின் வெளியையீட்டின் பின்னர் கிடைக்கும் மொத்த லாபத்தொகையில் 2.5 சதவீதத்தையும் தனது நடிப்பிற்கான ஊதியமாக வரும்வகையிலேயே உடன்படிக்கை செய்துகொண்டாராம்.
இதன் காரணமாக, 2018ம் ஆண்டு உலகம் முழுவதுமுள்ள பல திரையங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த "அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வோர்" திரைப்படம் இந்திய ரூபா பண மதிப்பில் மொத்தமாக சுமார் 14 ஆயிரம் கோடியை வருமானமாக பெற்றுக்கொடுத்திருந்தது. இந்த "அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வோர்" திரைப்படத்தில் நடித்ததற்கான முழுமையான சம்பளமாக, நடிகர் ரொபேர்ட் டவுனி ஜூனியர் 75 மில்லியன் டொலர்களை வாரிச் சுருட்டியுள்ளார் என்கின்றது அமெரிக்காவின் 'ஹொலிவூட் ரிப்போர்ட்டர்’ எனும் செய்தித்தாள்.
இதேவேளை, அண்மையில் திரைக்கண்ட 'அவெஞ்சர்ஸ்' படத்தின் கடைசி பாகமான "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" வெறும் 7 நாட்களில் இந்திய ரூபா மதிப்பில் 9000 கோடியை வருமானமாக கொண்டுவந்திருப்பதாகச் சொல்கின்றது இந்தப் படத்தின் தயாரிப்புத் தரப்பு.