கடந்த ஆண்டு மே மாதம் 19 ம் திகதி இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகன் ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு நேற்று அதிகாலை 5 . 26 க்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த செய்தியை உத்தியோக பூர்வமாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தாயும்-சேயும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் ஏழாவது வாரிசு இந்த குழந்தை ஆகும். குழந்தை பிறப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இளவரசர் ஹாரி, "நான் முதல் முறையாக தந்தையாகிய, இந்த உணர்வு மிகவும் அற்புதமாக உள்ளது. எனது மனைவி குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்.
எனது மகன் என்னை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளார். நான் விண்வெளியில் பறப்பதை போல உணர்கிறேன். நான் இதுவரை உணராத அனுபவத்தை உணருகிறேன். இந்த அனுபவத்தை இதற்கு முன்பு நான் கற்பனையும் செய்து பார்த்தது கிடையாது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.