பிரபல இயக்குனராக இருந்து பின்னர் தானும் ஒரு நடிகனாக அரிதாரம் பூச வேண்டும் என்ற ஆசையில் கதாநாயகன் ஆனவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.
பல திரைப்படங்கள் இதுவரைக்கும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்தாலும் அவை பெரும்பாலும் குடும்பமாக குழந்தைகளோடு ஒன்றாக இருந்து பார்க்கும் அளவுக்கு தரமான திரைப்படங்களாக அமையவில்லை. இந்தநிலையில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அண்மையில் "மான்ஸ்டர்" என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்தப் படம், எலியை மையப்படுத்திய கதையாக அமைந்துள்ளதோடு, குழந்தைகளோடு குடும்பமாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதனால் "மான்ஸ்டர்" படத்திற்கான வரவேற்பு சிறப்பாக கிடைத்துள்ளது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள "மான்ஸ்டர்" படம் பற்றியும், தனது திரையுலக வாழ்க்கை பற்றியும் எஸ்.ஜே.சூர்யா பொது வெளியில் மனம் திறக்கையில், "உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் ஸ்டூடியோக்களில் நடக்கும் படப்பிடிப்புக்கு 50 ரூபாய் கொடுத்து வேடிக்கை பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் பாலைவனமாகத் தெரிகிறது. ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு எனக்கு நிறைவேறியிருக்கிறது.
ஒரு நடிகனாக இந்தப் புது பயணம் தொடரும். நான் நடித்து வெளியாகும் என் படத்தை ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதைத் தவறவிட்டுவிட்டோமே எனும் குற்ற உணர்வு வருகிறது. எலியால் தொடங்கிய இந்தப் பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களிலும் தொடர்ச்சியாக்கி நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நடிப்பதற்கான நல்ல வாய்ப்பு இனி என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்" என்கிறார் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.
இதேவேளை, இன்றைய முன்னணி நட்சத்திரங்களாக மின்னும் வசூல் போட்டி நாயகர்களான 'தல'அஜித் மற்றும் 'தளபதி' விஜய் ஆகிய இருவரையும் வைத்து சூப்பர்ஹிட் படங்களையும் இயக்கியுள்ளீர்கள். இந்த இருவரில் யார் அரசியலுக்குப் பொருத்தமானவர் என்ற கேள்விக்குப் பதில் கூறிய எஸ்.ஜே.சூர்யா, “விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாகச் செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாகட்டும், அல்லது வேறு எந்த ஒரு விடையமாகட்டும். அவர்கள் இருவருக்கும் தம்மை வெற்றியாளராக மாற்றும் திறமை உள்ளது. தமது அரசியல் பிரவேசம் தொடர்பில் முடிவு செய்ய வேண்டியது அவர்களை பொறுத்தது" என்று கூறி சிக்கலுக்குள் சிக்காமல் தப்பித்தார் இந்த சமஜோசித புத்தி கொண்ட இயக்குனர்.