தென்னிந்தியத் திரையுலகம் எனப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் வில்லன் பாத்திரம் தொடக்கம் குணசித்திர வேடங்கள் வரை நடிப்பில் பின்னியெடுக்கும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனக்குள்ள ரசிகர் பலத்தின் மூலம் அரசியலிலும் நுழைந்து தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்து மூக்குடைபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நம்ம 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தமது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் ஆசை மூளையைக் குடைந்தமையால் நடிகர் பிரகாஷ்ராஜும் கர்நாடக மாநிலத்தில் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார்.
நடிகர் என்ற காரணத்தினால் தனக்குள்ள ரசிகர் வட்டமும், அவர்கள் மூலம் பெருமளவிலான மக்கள் தன்னை அரசியலில் ஏறுக்கொள்வார்கள் என்ற கனவு கண்ட பிரகாஸ்ராஜ், சிறிது காலமாக பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடித்து வந்ததோடு, பணமதிப்பிழப்பு மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை ஆகிய விஷயங்களில் மோடியையும் இந்துத்துவா அமைப்புகளைகளையும் தொடர்புபடுத்தி கடும் விமர்சனங்களையும் பொதுவெளியில் முன்வைத்தே தனது வாக்குச் சேகரிப்பு முயற்சியை மேற்கொண்டார்.
நடைபெற்று முடிந்த இந்திய பொதுத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கிய நடிகர் பிரகாஸ்ராஜ், தனது தொகுதியிலுள்ள ஒவ்வொரு தெருவிலும் நடையாய் நடந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டும் அவரால் பாராளுமன்றக் கதிரையில் உட்காரும் கனவு கைகூடவில்லை.
இந்தநிலையில் தனது தேர்தல் தோல்வி குறித்து டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பிரகாஸ்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில், “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. அத்தோடு கேலி, இழிவான சொற்கள், அவமானங்களும் எனது பாதையில் வருகின்றன. ஆனாலும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை மேலும் தொடர்வேன். இப்போதுதான் எனது கடுமையான பயணம் தொடங்கியுள்ளது. எனது இந்தப் பயணத்தில் என்னுடன் கூட இருந்தவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார் இந்த 'செல்லம்' வில்லன்.