தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி, அண்மையில் வெள்ளித்திரைக்கண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் திரைப்படம் "மான்ஸ்டர்".
படம் வெளியான முதல் ஒரு சில நாட்களை விட தற்போது படத்திற்கான ரசிகர்களின் வருகை திரையரங்குகளை நிறைத்துக்கொண்டிருப்பதால் வசூலை அள்ளிக்கொள்ள ஆரம்பித்துள்ளது "மான்ஸ்டர் திரைப்படம். குடும்பத்தோடு சேர்ந்திருந்து பார்க்கும் வகையில் முதன் முறையாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்த படமொன்று திரை கொண்டிருப்பதும் இந்த வசூலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், "மான்ஸ்டர்" திரைப்படத்தின் வெற்றி மற்றும் படம் உருவாக்குவதில் பங்கேற்றோருக்கான நன்றி கூறுதல் தொடர்பான விழா ஒன்று சென்னையில் படக்குழுவினரால் நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா படம் பற்றிக் குறிப்பிடுகையில், "முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. படத்தின் கதாநாயகன் யார் என்று பார்த்து அவருக்காகப் படம் பார்க்க திரையரங்குகளுக்கு மக்கள் வரும் காலம் கடந்து, இப்போது படத்தின் கதைக்காக திரையரங்குகளுக்கு வருகிறார்கள் மக்கள். காரணம், இப்படத்தில் கதைதான் நாயகன்.
திரையரங்குகள் அனைத்திற்கும் நேரடியாகச் சென்று படம் பற்றிய நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து "மான்ஸ்டர்" திரைப்படத்தை வயது வேறுபாடின்றி ரசிக்கின்றார்கள் அனைவரும். படம் பார்க்க வந்திருந்த ஒரு சிறுவன் என்னைப் பார்த்து 'எலி மாமா' என்று கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
அந்தச் சிறுவன் போன்று படம் பார்க்க வந்த குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக வேண்டும். கட்டாயம் நடிப்பேன் என்ற நம்பிக்கை மேலோங்குகின்றது. "பாகுபலி" திரைப்படத்திற்குப் பின்னர் "மான்ஸ்டர்" திரைப்படத்திற்குத் தான் திரையரங்குகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகளை படம் பார்க்க வந்த குழந்தைகளின் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்ததே "மான்ஸ்டர்" திரைப்பட இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பு செய்தல் எனும் நற்பண்பை விதைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
இந்த "மான்ஸ்டர்" திரைப்படத்தை உருவாக்கிய இதே படக்குழுவினருடன் மீண்டும் ஒரு சிறந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே எனது தற்போதைய ஆவல்" என்கிறார் எலி மாமா.