தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனராக "பாஹுபலி" திரைப்படத்தின் உருவாக்கத்திற்குப் பின்னர் அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர் ராஜமவுலி, வரலாற்றுக்கதை ஒன்றை "ஆர்.ஆர்.ஆர்" என்ற பெயரில் 300கோடி இந்திய ரூபா பொருட்செலவு செய்து உருவாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்திருக்கின்றது.
ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் மொழி கடந்து இடம்பிடித்துள்ள இந்த வரலாற்றுக் கதையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தை சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடிக்க கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகிய சுதந்திர போராட்டத் தியாகிகளின் கதையே "ஆர்.ஆர்.ஆர்" என்ற பெயரில் படமாகிக்கொண்டிருக்கும் நிலையில், திடீரென நடிகை டெய்ஸி எட்கர் தான் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதனால், அவரது பாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என்ற தீர்மானத்தில் முடிவு காணப்படவில்லை.
இந்தநிலையில், 'பொலிவூட்' திரையுலக நடிகைகளின் பெயர்களும் பரிசீலனையில் இருந்த நிலையில், தென்னிந்திய நடிகை சாய் பல்லவிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசப்போவதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது. காரணம், தற்போது "ஆர்.ஆர்.ஆர்" படக்குழு சாய் பல்லவியை படத்தில் நடிக்க வைக்கும் ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாம்.