பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான இந்தத் திரைப்படம், 'தல' கூட்டணியில் உருவாகி பெற்ற வெற்றியினால் சிறந்த இயக்குனராக அடையாளம் பெற்றார் முருகதாஸ். இந்த நிலையில், மீண்டும் இருவரது கூட்டணியில் ஒரு படம் வரவிருந்தபோதும் குறித்த திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட முதலே கைவிடப்பட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
"மிரட்டல்" என்ற பெயரில் வரவிருந்த அந்தத் திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து ஏதேதோ காரணங்களால் 'தல' அஜித் விலகிய பின்னர், மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அதே திரைக்கதை படமாக உருவாகி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அந்தப் படம் தான் நடிகர் சூர்யா மற்றும் அசின் இணைவில் திரை கண்ட "கஜினி". ஹிந்தியிலும் அமீர் கான் நடிப்பில் வெளியாகியிருந்தது இந்த திரைப்படம்.
தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினியின் "தர்பார்' திரைப்படம் நாளை மறுதினம் திரைகாணவுள்ள நிலையில், இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தல் வேலைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பணிகளில் "தர்பார்" படத்துடன் தொடர்புடைய பிரபலங்கள் பலரும் பங்கேற்றுவருவதோடு, ஏ.ஆர்.முருகதாஸும் தன் பங்கிற்கு களமிறங்கியுள்ளார்.
இந்தநிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது திரைப்பட அனுபவங்கள் பற்றி "தர்பார்" திரைப்பட விளம்பரப்படுத்தல் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது பகிர்ந்து கொள்கையில்,
எனது இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த "மிரட்டல்" படத்தின் கதையை அஜித்திடம் சொன்னதும், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சிக்ஸ் பேக் வைத்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று எனக்கே ஆலோசனை கூறினார். இந்த ஜோசனையை அவர் என்னிடம் சொல்லும் வரைக்கும் எனக்கு அப்படியானதொரு எண்ணமே மனதில் தோன்றவில்லை.
அஜித் கூறிய அந்த யோஜனை சிறப்பானது என்று அதன் பின்னர் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன். ஆனால், எங்கள் இருவர் கூட்டணியில் அந்தப் படம் உருவாகவில்லை. இருந்தும், அதே கதையை "கஜினி" என்ற பெயரில் படமாக்கியபோது தமிழிலும், ஹிந்தியிலும் நடித்த கதாநாயகர்கள் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் அஜித் தான்" என்று 'தல' புகழ் பாடுகின்றார் முருகதாஸ்.