மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் இந்திய தொடர் இடைநடுவே ரத்தாகியது !!இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர் இடைநடுவே கைவிடப்பட்டிருக்கிறது.இதன்மூலமாக இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில் சுமூகமற்ற நிலை உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே இந்த 2 அணிகளுக்குமிடையில் 5 ஒருநாள் ஆட்டங்களும்,1 T20 போட்டியும்,3 டெஸ்ட் போட்டிகளும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தது.
ஒக்டோபர் 3 ம் திகதி ஆரம்பமான இந்த தொடர் எதிர்வரும் நவம்பர் 15 ம் திகதி வரை இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த சிக்கல் நிலைமை வந்திருக்கின்றது.
மேற்கிந்திய கிரிக்கெட் சபைக்கும், வீரர்களுக்குமிடையில் ஒப்பந்த சிக்கல் நிலைமை காரணமாக சுமூகமான நிலைமை இருக்கவில்லை.இதனால் அவர்கள் ஒருநாள் போட்டித்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரான பயிற்சி நடவடிக்கைகளை கைவிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் போடித்தொடருக்கு எந்தவித சிக்கல் நிலையும் இருக்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தலைவர் டிவயன் பிராவோ தெரிவித்திருந்தார்.
இப்படியிருக்கின்ற போது மேற்கிந்திய கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையில் இன்றுவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் தொடரிலிருந்து விலகுகின்ற முடிவுக்கு வீரர்கள் வந்துவிட்டனர்.
இதன் காரணத்தால் போட்டிக்கான அனுசரணையாளர் முதற்கொண்டு பல்வேறுவிதமான நடைமுறைச் சிக்கல்களை இந்திய கிரிக்கெட் சபை இப்போது முகம்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
இந்த திடீர் நெருக்கடி நிலைக்கு காரணமான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக தாம் சட்ட நடவிக்கை எடுக்கவுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் சபை எச்சரித்திருக்கின்றது.
ஆயினும் அனுசரணையாளர்களை திருப்திபடுத்தி நெருக்கடி நிலையை தணிப்பதற்காக இந்திய கிரிக்கெட் சபை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உதவியை நாடியிருக்கின்றது.
இலங்கை அணியை ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்கும் அழைப்பை விடுத்து அவர்கள் காத்திருக்கின்றார்கள்.இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தொடர்பு கொண்டு வினவிய போது அதற்கான அழைப்பு கிடைத்திருப்பதாகவும் அதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 1-1 என்ற நிலையில் சமப்பட்டிருக்கும் இந்திய ,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடரை தீர்மானிக்கபோகும் முக்கிய போட்டி தற்சமயம் தர்மசாலாவில் இடம்பெறுகின்றது.
*தில்லையம்பலம் தரணீதரன்