உடலில் இரத்த சர்க்கரை அளவு எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறது என்பதை Glycemic Index என்கிறோம். அதாவது, நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு விரைவாக குளுக்கோஸாக மாறுகிறது என்பதை இது குறிக்கிறது.
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, Glycemic Index குறைவாக உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்தது.
இரவு முழுவதும் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் அளவோடு சாப்பிடுவது, சிலருக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவலாம்.
கொய்யாப்பழம், பப்பாளி, நாவல்பழம் போன்ற பழங்களை அளவோடு சாப்பிடலாம்.
மேலும் கம்பு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, கைக்குத்தல் அரிசி மற்றும் தவிடு நீக்கப்படாத முழு கோதுமை சப்பாத்தி போன்ற முழுத்தானிய உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, வெள்ளை அரிசி மற்றும் கோதுமை போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை விட, கம்பு அல்லது கேழ்வரகு போன்ற முழுத்தானியங்களை சாப்பிடும்போது, இரத்தத்தில் சக்கரை அளவு மெதுவாகவும் சீராகவும் அதிகரிக்கும்.
அதேபோல், சிக்கலான மாச்சத்துகள் கொண்ட உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. இவ்வகை உணவுகள் உடலில் மெதுவாக ஜீரணமாகி, இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகின்றன.
சர்க்கரை நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டுடன், தினசரி உடற்பயிற்சி செய்து, மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி உணவுமுறையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.