உலக அளவில் பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவில் தங்கள் தொலைபேசியை தலையணைக்கு அடியிலோ அல்லது அருகிலோ வைத்துக்கொண்டு தூங்குவதை ஒரு சாதாராண வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த பழக்கம் எளிதானதாகத் தோன்றினாலும், நீண்டகால நோக்கில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தொலைபேசியில் இருந்து வெளிப்படும் நீல ஒளி மெலடோனின் உற்பத்தியைக் குறைத்து, உடலின் இயற்கையான தூக்க சுழற்சியைக் கடுமையாகப் பாதிக்கிறது. மெலடோனின் என்பது தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன் ஆகும். இரவில் செல்போன் திரையைப் பார்ப்பது மூளையை விழித்திருக்கச் செய்து, ஆழ்ந்த உறக்கத்தைத் தடுக்கிறது.
தொலைபேசிகள் எலக்ட்ரோமேக்னடிக் கதிர்வீச்சை (EMF) வெளியிடுகின்றன. இது குறைந்த அளவில் இருந்தாலும், நீண்ட நேரம் நம் உடலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது கவலைகளை எழுப்புகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த கதிர்வீச்சை "மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமுள்ள காரணி" என வகைப்படுத்தியுள்ளது.
தலையணைக்கு அருகில் தொலைபேசியை வைப்பதால், நீண்ட நேரம் இந்த கதிர்வீச்சு நம் உடலை நேரடியாகத் தாக்கக்கூடும். இது தலைவலி, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற உடனடி பிரச்சனைகளையும், எதிர்காலத்தில் மிகவும் தீவிரமான உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடும்.