சோலார் தகடுகள் மூலம் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பெறும் தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும், மைக்ரோவேவ் அலைகளை வயர்லெஸ் முறையில் கடத்தி மின்சாரம் பெறும் திட்டத்தில் சீனா வெற்றி கண்டுள்ளது.
பகல் இரவு நேர சுழற்சிமுறை சரியாக இடம்பெறாத விண்வெளியில் சூரியத் தகடுகளை வைத்து, 24 மணி நேரமும் மின்சாரத்தை உருவாக்கி கம்பியில்லா முறையில் விண்வெளி மற்றும் பூமியில் உள்ள சாதனங்களுக்கு மின்சாரத்தை அனுப்ப முடியும் என்ற சீன விஞ்ஞானிகளின் நம்பிக்கையின் படி, 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் மின்சாரத்தைக் கடத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
சீனாவின் சிடியான் பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்று, "சூரியனைத் துரத்துதல்" எனப் பொருள்படும் திட்டமொன்றை உருவாக்கி, ஒரே நேரத்தில் நகரும் பல இலக்குகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய கம்பியில்லா மின் பரிமாற்றத்திற்கான ஒரு சோதனை அமைப்பின் மூலம், 75 மீட்டர் உயரம் உள்ள கோபுரத்தில் 4.8 மீட்டர் விட்டமுள்ள குவிமாடக் கண்ணாடியொன்றைப் பொருத்தி சூரிய ஒளியை ஒரு புள்ளியில் குவித்து அதை மைக்ரோவேவ் அலைகளாக மாற்றி, அந்த அலைகளை 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் கடத்தி மறுமுனையில் அதை மீண்டும் மின்சாரமாக மாற்றி 1,180 watts மின்சக்தியை உருவாக்கி குறித்த குழு சாதித்துள்ளது.
பல சவால்கள் நிறைந்த இந்தத் திட்டத்திற்கு பாரிய செலவு ஏற்பட்டாலும், எதிர்காலத்தில் 24 மணி நேரமும் சூரியனிலிருந்து நிலையான கார்பன் வெளியீடு இல்லாத மின்சாரத்தை பூமிக்குக் கொண்டு வர முடியும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.