முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை மினுமினுக்கிறதா? அதற்காக கவலைப்பட வேண்டாம். வீட்டிலேயே கிடைக்கும் வெள்ளரிக்காய், தக்காளி, தேன் போன்றவற்றை சருமப் பராமரிப்பில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காய் துண்டுகளை முகத்தில் மெதுவாகத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவலாம். தக்காளியை முகத்தில் தடவி 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதும் எண்ணெய் பசை தோற்றத்தை குறைக்க உதவக்கூடும்.
அதேபோல், தேனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்க உதவும். முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுவது சருமத்தை தற்காலிகமாக இறுக்கமாக உணரச் செய்யலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து பார்க்கலாம்.
இவற்றுடன் முல்தானி மிட்டியை பன்னீருடன் கலந்து முகத்தில் பூசி, உலர்ந்ததும் கழுவலாம். சோற்றுக்கற்றாழை ஜெல்லையும் 30 நிமிடங்கள் வரை முகத்தில் வைத்து கழுவுவது எண்ணெய் பசை சருமத்திற்கு புத்துணர்ச்சியளிக்கலாம். அழகுக்காக எதைப் பயன்படுத்தினாலும் முதலில் சிறிய பகுதியில் சோதனை செய்து பார்ப்பது அவசியம் என அழகுக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர் .