நமது அன்றாட வாழ்வில் தொலைபேசி ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால், அதற்கான கோபுரம் மட்டும் எப்போதும் ஒரு அச்சத்தையே தருகின்றது. கதிர்வீச்சு என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆபத்தானது என்ற பிம்பம் மக்களிடையே உள்ளது.
தொலைபேசி கோபுரங்கள் அருகில் இருக்கும்போது தலைவலி, தூக்கமின்மை அல்லது உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுமோ என்ற பயம் இயல்பானதுதான். ஆனால், இதற்கான அறிவியல் பின்னணியை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
அறிவியல் ரீதியாக கதிர்வீச்சுகளை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. அயனியாக்கும் கதிர்வீச்சு (Ionizing Radiation): இதுதான் எக்ஸ்-ரே (X-ray) போன்ற மருத்துவ பரிசோதனைகளில் பயன்படுத்தப்படுவது. அதிக அளவில் படும்போது இது செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
2. அயனியாக்காத கதிர்வீச்சு (Non-Ionizing Radiation): தொலைபேசி கோபுரங்கள் வெளியிடுவது இந்த வகைதான். இது ரேடியோ அலைகளைப் போன்றது. இது செல்களின் டி.என்.ஏ-வை (DNA) சிதைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவை அல்ல.
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பல்வேறு சர்வதேச அறிவியல் அமைப்புகள் பல ஆண்டுகளாக இது தொடர்பில் ஆய்வு செய்துள்ளன. அதற்கமைய தொலைபேசி கோபுரங்கள் குறிப்பிட்ட உயரத்தில் நிறுவப்படுகின்றன. அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு, தரைமட்டத்திற்கு வரும்போது மிக மிகக் குறைவாகவே இருக்கும்.
எனவே, உங்கள் வீட்டின் அருகில் தொலைபேசி கோபுரங்கள் இருப்பதால் மட்டும் உடல்நலம் பாதிக்கப்படாது என கூறப்படுகிறது.