தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூரியின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'மண்டாடி'. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இத்திரைப்படத்தை எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ். இன்போ நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், தெலுங்கு நடிகர் சுஹாஸ், நடிகர் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்சுத் குமார், சச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 75 கோடி ரூபா செலவில் உருவாகி வருகிறது. சூரியின் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.
'மண்டாடி' திரைப்படத்தின் முதல் பாடலான 'மண்டாடி மண்டாடி' வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. கிராமிய பின்னணி மற்றும் மீனவர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தின் 2ஆவது பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ பாடலை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகளில் கபில் கபிலன் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இணைந்து பாடியுள்ளனர்.