35 Views
கை விரலில் வலி, இறுக்கம் அல்லது வீக்கம் இருந்தால், முதலில் கைகளுக்கு போதிய ஓய்வு கொடுப்பது உதவியாக இருக்கும். தொலைபேசி , கணினி பயன்படுத்துவது மற்றும் கனமான பொருட்களைத் தூக்குவது போன்ற செயல்களைக் குறைத்து, காயம் அல்லது வீக்கம் இருந்தால் துணியில் சுற்றிய ஐஸ் கட்டிகளை 10–15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம். நீண்டநாள் விறைப்பு இருந்தால் வெதுவெதுப்பான நீரில் விரல்களை சில நிமிடங்கள் வைத்திருப்பதும் நிவாரணம் அளிக்கும் .
விரல்களின் இயக்கத்தை மேம்படுத்த சில எளிய பயிற்சிகளையும் வீட்டிலேயே செய்யலாம். கையை நேராக நீட்டி, விரல்களை மெதுவாக உள்ளங்கைக்குள் மடித்து 5 விநாடிகள் வைத்திருந்து மீண்டும் விரிக்கலாம்; இதை 5–10 முறை செய்யலாம். அதேபோல், மென்மையான stress ball-ஐ விரல்களால் மெதுவாக அழுத்தி 5 விநாடிகள் பிடித்து விடுவதும் பயனுள்ளதாக இருக்கலாம். வலி அதிகரித்தால் பயிற்சியை நிறுத்துவது அவசியம்.
ஆனால் விரலை மடக்கவோ நீட்டவோ முடியாத நிலை, தொடர்ந்து மரத்துப்போதல் அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு, அதிக வீக்கம் மற்றும் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. குறிப்பாக காய்ச்சலுடன் விரல் அல்லது மூட்டு சிவந்து வீங்கினால் விரைவாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.