36 Views
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சூர்யகுமார் யாதவ், எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கிண்ணம் மற்றும் விஜய் ஹசாரே கிண்ணத் தொடர்களில் மும்பை அணியின் தலைவராகச் செயற்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மூத்த தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் மும்பை அணியின் ரஞ்சி கிண்ணக் குழுவில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாத நிலையில், தற்போது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அணியை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பெற்ற அனுபவத்தையும் தலைமைத்துவத் திறனையும் உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்த அவருக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி சையத் முஷ்டாக் அலி கிண்ணத் தொடரில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி ஹைதராபாத் அணிக்கு எதிராகத் தனது முதல் போட்டியில் களமிறங்கவுள்ளது. இத்தொடரில் சிறப்பாகச் செயற்படுவதுடன், விஜய் ஹசாரே கிண்ணத்திலும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதே சூர்யகுமார் யாதவின் முக்கிய இலக்காக இருக்கும் எனக் கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.