55 Views
நியூசிலாந்தில் மட்டுமே வாழ்ந்த மோவா (Moa) எனப்படும் இராட்சதப் பறவைகள், பறக்க முடியாத தனித்துவமான உயிரினங்களாகும். இவற்றில் மிகப்பெரிய இனங்கள் சுமார் 3.6 மீற்றர் உயரம் வரை வளர்ந்ததுடன், 230 முதல் 250 கிலோகிராம் வரை எடை கொண்டிருந்தன. சிறிய இறக்கைகளின் எச்சங்கள்கூட இல்லாத இப்பறவைகள், நீண்ட கழுத்தையும் வலுவான கால்களையும் கொண்ட தாவர உண்ணிகளாக விளங்கின.
மோவா பறவைகளின் மற்றொரு வியப்பூட்டும் அம்சம் அவற்றின் முட்டைகளாகும். சாதாரண கோழி முட்டைகளைவிட சுமார் 80 மடங்கு பெரிய முட்டைகளை இவை இட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்தின் இயற்கைச் சூழலில் வாழ்ந்த இப்பறவைகள், அப்பகுதியின் தனித்துவமான விலங்கினங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர், மனிதர்களின் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிவு உள்ளிட்ட காரணங்களால் மோவா பறவைகள் முற்றாக அழிந்துபோயின. இருப்பினும், நியூசிலாந்தின் மவுண்ட் ஓவன் பகுதியில் 1987ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, தோல் மற்றும் தசைத் திசுக்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டிருந்த மோவா பறவையின் கால், பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வுகளில் இன்றளவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.