ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பணிகளுக்காக சுமார் 10 முதல் 12 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் பேசிய அவர், இந்தப் படத்தின் இசையில் முழுக் கவனம் செலுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைக்காக, ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இசைக்கோர்வையையும் செம்மைப்படுத்துவதற்குப் பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெறும் ‘ராவண தாண்டவம்’ இசைக்கோர்வை மட்டும் 12 முதல் 13 முறை மாற்றியமைக்கப்பட்ட பின்னரே இறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமக்குப் பிடித்தமான, கலை ரீதியாகத் திருப்தியளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே பணியாற்ற விரும்புவதாகவும் ரகுமான் கூறியுள்ளமை, இரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.