சினிமாவை பொறுத்தவரை தந்தை பெயர் சொல்லும் பிள்ளையாக இல்லையென்றாலும், தந்தையின் பெயரைக் கொண்டு தமிழ் சினிமாவில் முடிந்தவரை முன்னேற முயற்சிக்கிறார் சிபிராஜ்.
இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் "நாய்கள் ஜாக்கிரதை". சிபியின் முதற்படம் ஸ்டூடண்ட் நம்பர் 1. பின் தந்தையுடன் சேர்ந்து நடித்த முதற்படமான "ஜோர்" அவரின் முன்னேற்றத்திற்கு ஜோராக அமையவில்லை. தொடர்ந்து தந்தை சத்யராஜ் உடன் சேர்ந்து ஒரு சில படங்களென நடித்தும் ஏதும் எடுபடாத நிலையில் இப்போது "நாய்கள் ஜாக்கிரதை".
இந்தப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு" படநாயகி அருந்ததி நடித்திக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சிபியோடு, மனோபாலா, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் மற்றும் பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடித்துள்ளதாம். சிபிக்கு இணையான கதாபாத்திரம் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளதாம்.
சிபிராஜுடன் பிரசன்னா சேர்ந்து நடித்த ‘நாணயம்’ படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். தரண்குமாரின் இசையில் வெளியாகும் இந்தப்படத்தை சிபியின் தந்தை சத்யராஜ் தயாரித்திருக்கிறார்.
இந்தநிலையில், இப்படத்தின் விளம்பர உத்தியாக டாக்கி டாக்கி எனும் வீடியோ பாடலை சிலநாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப்பாடலை நம்ம இளையதளபதி விஜய்யும் பார்த்திருக்கிறாராம். பார்த்ததோடு நிறுத்தாமல் பாடல் சிறப்பாக உள்ளதென மனம் திறந்து பாராட்டியிருக்கிறாராம். இதற்குமுன் படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியானபோதும் அதைபார்த்தவுடன் சிபிராஜுக்கு பாராட்டினாராம் இளையதளபதி.
இவ்வாறு முதல் ஆளாக விஜய் தன்னைப் பாராட்டியது சொல்லத்தெரியாத சந்தோசமும், பெருமையுமாக இருப்பதாக சொல்கிறாராம் சிபிராஜ்.
முட்டித் தள்ளி முன்னேற்ற முயல்கிறார் தந்தை.....முடிந்தவரை முயற்சிக்கிறார் தனயன். முடிவு............???
*கணேசமூர்த்தி ராகவன்.