வியக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த ரோஹித் சர்மாவின் இரட்டை சதம்.இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டி கொல்கொத்தா Eden garden மைத்தானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது.
இந்த மைதானத்தின் பெயரை சொன்னாலே உங்களுக்கும் எங்களுக்கும் நினைவுக்கு வருவது 1996 உலக கிண்ணத்தின் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி தான்.
அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் STUMPING முறைமூலமாக ஆட்டமிழந்து போக திக்குமுக்காடிப்போன இந்திய அணியின் தோல்வியை ஜீரணித்துக் கொள்ளாத இந்திய ரசிகர்கள் கற்களாலும்,தண்ணீர் போத்தல்களாலும் இலங்கை வீரர்கள் மீது தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.இன்னும் சிலர் மைதானத்தின் இருக்கைகளை சேதப்படுத்தியதோடு ஆங்காங்கே இருக்கைகளுக்கு தீ மூட்டி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு அழிக்க முடியாத அவப்பெயரை தோற்றுவித்தார்கள்.

இறுதியில் போட்டி மத்தியஸ்தரின் முடிவுப்படி போட்டி இடைநிறுத்தப்பட்டு இலங்கை முதல் தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்படியான கறைபடிந்த நிகழ்வுகள் அரங்கேறிய இந்த கொல்கொத்தா ஆடுகளம் இப்போது 150 வது ஆண்டில் கால்பதித்திருக்கிறது.
ஆரம்பத்தில் கேக் வெட்டி இந்த நிகழ்வை இரு அணித்தலைவர்களும் வைபவ ரீதியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இப்படியான சோககதைகளுக்கு பேர் போன இந்த கொல்கொத்தா மைதானத்தில் தான் ரோகித் சர்மாவின் வரலாற்றில் மறக்க முடியாத சாகசம் அரங்கேறப்போகிறது என்பதை யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை எனலாம்.
சோதனைகளால் அவதிப்பட்டவர் சாதனைகளால் மகுடம் சூடியிருக்கிறார்.மறக்கவே முடியாத ஒரு அபரிவிதமான ஒருநாள் போட்டி சாதனைக்கு சொந்தக்காரரானார் இந்த ரோஹித் சர்மா.
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது காயத்தால் அவதிப்பட்ட நிலையில் அணியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டார்.
பின்னர் அந்த அணிக்கெதிரான தொடரில் ஆரம்ப வீரராக வந்த அஜின்கியா ரஹானே தன் கன்னி சதத்தை பெற்று தானும் ஒரு சிறந்த ஆரம்ப வீரர் என்பதை அடையாளபடுத்தினார் .
இப்படியிருக்க இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவை அணியில் உள்வாங்காமல் அஜின்கியா ரஹானியையே ஆரம்ப வீரராக பயன்படுத்த தீர்மானித்தனர்.
இந்த நிலையில் தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தேவையும்,ஆரம்ப வீரரராக அசத்த வேண்டிய தேவையும் இவருக்கு மறைமுகமாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது.
இப்படியான நிலையில் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக சாதனையை ரோகித் இன்று படைத்திருக்கிறார்.
ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதத்தை எட்ட முடியவே முடியாது என்று எல்லோரும் நினைத்துகொண்டிருந்த நேரத்தில் தென் ஆபிரிக்க அணிக்கெதிராக சச்சின் 147 பந்துகளில் 200* ஓட்டங்களை பெற்று முதல் தடவையாக சாதித்து காட்டினார்.

பின்னர் இன்னுமொரு இந்திய ஆரம்ப வீரர் விரேந்தர் சேவாக் 2011 ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இந்தியாவின் இந்தூர் மைதானத்தில் வைத்து 149 பந்துகளில் 219 ஓட்டங்களை பெற்று இந்த உலக சாதனையை புதுப்பித்தார்.
இதன்பின்னர் இந்த ரோஹித் சர்மா கடந்த 2013 நவம்பரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 158 பந்துகளில் 209 ஓட்டங்களை பெற்று 3 வது இரட்டை சதம் என்ற சாதனையை மட்டுமல்லாது அதிக கூடியதான 16 ஆறு ஓட்டங்களையும் பெற்று இன்னுமொரு உலக சாதனை படைத்தார்.
சரியாக ஓர் ஆண்டு நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இன்னுமொரு இரட்டை சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் ரோஹித் சர்மா.அது மாத்திரமல்லாமல் எவராலும் இனிவரும் நாட்களில் எட்ட முடியாத எண்ணிக்கை என நினைக்கும் ஓர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்து உலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறார் என்றால் மிகையில்லை.

இதன்மூலமாக இந்திய அணி 400 க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை 5 வது தடவையாக பதிவு செய்திருந்தது.இலங்கைக்கு எதிராக இரண்டாவது தடவையாக இவ்வாறு 400 கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டிருப்பதோடு மாத்திரமல்லாமல் 153 ஓட்டங்களால் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்று முன்னிலை பெற்றிருக்கின்றது.
ஒரு நாள் சர்வதேச போட்டிகள் வரலாற்றில் இன்றோடு சேர்த்து இதுவரை மொத்தம் 3544 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை எட்டப்படாத சாதனைகள் பலது பதியப்பட்டிருக்கிறது இன்றைய போட்டியில்..
ஒருநாள் போட்டியொன்றில் சச்சின்,சேவாக் ஆகியோர் தலா 25 நான்கு ஓட்டங்கள் பெற்றமைதான் இதுவரையான உலக சாதனையாகும்.இன்று அதனை கடந்து ரோகித் சர்மா 33 நான்கு ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்திலும் கூட ஆரம்ப வீரராக வந்த ரோகித் 111 பந்துகளில் 142 ஓட்டங்களை பெற்றுகொண்டார்.ஆயினும் அதன் பின்னரான 3 ஒரு நாள் ஆட்டங்களிலும் இவருடைய உடற்தகுதி நிலை காரணமாக தேர்வாளர்கள் இவருக்கான முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.
3 போட்டிகளில் வாய்ப்பை பெற்றிராத இவர் இன்று தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 173 பந்துகளில் 9 ஆறு ஓட்டங்கள் 33 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 264 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
போட்டியின் இறுதி ஓவரின் இறுதி பந்தில் மகேலவிடம் பிடி கொடுத்து இவர் ஆட்டமிழந்தார்.இதற்கு முன்னர் 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது திசர பெரேரா பிடியொன்றை தவறவிட்டார்.இதனை பயன்படுத்திகொண்ட ரோகித் இதன் பின்னரும் 2 பிடியெடுக்கும் வாய்ப்புக்களை வழங்கினாலும் இலங்கை வீரர்களால் இவரை ஆடுகளம் விட்டு அனுப்ப முடியாமலே இருந்தது.
முதலாவது 50 ஓட்டத்தை 72 வது பந்திலும் ,தன் 100 வது ஓட்டத்தை 100 வது பந்திலும்,150 வது ஓட்டத்தை 125 வது பந்திலும்,200வது ஓட்டத்தை 151 பந்திலும் பூர்த்தி செய்தார்.பின்னர் இறுதி 22 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்று சாதித்துக் காட்டினார்.

இந்திய அணி இன்று பெற்ற 404 ஓட்டங்களில் 65% ஓட்டங்கள் இவர் துடுப்பு மூலமாகவே பெறப்பட்டது.
இதுவரைக்குமான ஒருநாள் ஆட்டங்களில் 173 பந்துகளை சந்தித்து அதிகமான பந்துகளுக்கு முகம் கொடுத்தவர் என்ற பெருமையும் இவருக்கே.
இதுவரைக்கும் இவர் பெற்றிருக்கும் 5 சதங்களுள் இரண்டை இரட்டை சதமாக்கியிருக்கிறார் இந்த ஆமைவேக ஆட்டக்காரர் என்று ஆரம்பத்தில் அழைக்கபட்ட ரோகித்.
ஒருநாள் போட்டிகளில் மத்திய வரிசையில் வாய்ப்பு கொடுக்கபட்ட ரோகித் சர்மா அதனை பயன்படுத்தாத நிலையில் ஆரம்ப வீரராக ஆடுகளம் அனுப்பபட்ட பின்னரே வெளியுலகுக்கு வெளிச்சமானர் என்பதும் கவனிக்கத்தக்கது.
எது எவ்வாறாயினும் உலக கிண்ணம் நெருங்கி வரும் நிலையில் ரஹானே +தவான் +ரோகித் என்று சொல்லி ஆரம்ப வீரராக களம் இறங்குவதற்கு மும்முனை போட்டி நிலவுகின்ற நிலையில் இந்திய தேர்வாளர்களுக்கு கடும் நெருக்கடியான சூழல் இப்போது உருவாக்கபட்டிருக்கிறது.
இதுவரைக்கும் ஒருநாள் இரட்டை சதங்கள் நான்கும் இந்திய ஆரம்ப வீரர்களால்,அதுவும் இந்திய மைதானங்களில் வைத்தே பெறப்பட்டிருக்கின்றன.
இப்படி சாதனைக்கு மேல் சாதனை படைத்த ரோகித் சர்மா இறுதியில் ஆடுகளம் விட்டு வெளியில் வந்து பேட்டியின் போது சொல்கிறார் இன்னுமொரு 50 ஓவர்கள் நான் ஆடுவதற்கு தயாராகவேதான் இருந்தேன் என்று.
தன் உடற்தகுதி எப்படியென்பதை இதன்மூலமாய் இந்திய தேர்வாளர்களுக்கு இவர் காட்டியிருக்கிறார் என்றேதான் சொல்ல தோன்றுகிறது.
வாழ்த்துக்கள் NO +HIT என்று அழைக்கப்பட்ட RO+HIT சர்மா.
*தில்லையம்பலம் தரணீதரன்.
