இளைய தளபதியாக தமிழ் திரையுலகில் 22 ஆண்டுகள் விஜய் ராஜ்ஜியம் ரசிகர்களால் இளைய தளபதி என செல்லமாக அழைக்கப்படும் விஜய் தனது சினிமா வாழ்வில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த சாதனைப் பயணத்தில் வெற்றி நாயகனாக பயணித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிக்கு வாழ்த்துக்களை சூரியன் சார்பில் தெரிவித்துக்கொள்வதோடு, ரசிகர்களைத் சுண்டியிழுக்கும் இவரின் சினிமா வாழ்க்கையைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
1992ம் ஆண்டு தன்னுடைய தந்தையான எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதற்கு முன் இவர் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், நாயகன் என்ற அந்தஸ்த்தை வழங்கியது நாளைய தீர்ப்பு திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
18 வயது மட்டுமே நிரம்பிய இளைஞனாக சினிமாவிற்குள் வந்தவர் இளையதளபதி விஜய். சிறிது காலத்திலேயே காதல் நாயகனாக கன்னியர் மத்தியில் வலம் வந்தவர். 1997ல் வெளியான லவ் டுடே, பூவே உனக்காக, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, போன்ற திரைப்படங்கள் மிகவும் பேசப்பட்டன. பூவே உனக்காக திரைப்படத்தின் க்ளைமெக்ஸில் விஜய் பேசிய காதல் தொடர்பான வசனம் இன்று வரை பேசப்படுகின்ற பிரபல வசனம் எனலாம். அதன் பின் வெளியான, நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றித்திரைப்படங்களாக கருதப்பட்டவை. இதன் பின் விஜய்க்கு வாய்ப்பில்லை என்று கூறியவர்களெல்லாம் யோசிக்கும் அளவில் வெளியான திரைப்படம் தான் ‘குஷி’. இத்திரைப்படம் இப்போது திரையிடப்பட்டாலும் பார்த்து ரசிக்க காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
இடைநடுவே குருவி, சுறா போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்திருந்த போதிலும், ப்ரெண்ஸ், பத்ரி முதல் துப்பாக்கி வரை வந்த படங்கள் பெரிதும் பேசப்பட்டன. இந்த காலகட்டத்தில் தான் இவர் வசூல் மன்னனாக வலம் வர ஆரம்பித்திருந்தார். மேலும் பாடகராகவும், நடன கலைஞராகவும் கூட கலக்கிகொண்டிருக்கிறார் இளைய தளபதி.
அண்மையில் வெளியான துப்பாக்கி திரைப்படம் சுப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் கத்தியும் சக்கைபோடு போட்டது. அடுத்தடுத்த திரைப்படங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
*பிரவீனா