12,486 Views
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை ஈசிஆரில் உத்தண்டி என்ற இடத்தில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 30 ஆம் தேதியோடு இந்த செட்டில் படப்பிடிப்பு நிறைவடைகிறது. எனவே படப்பிடிப்பு தற்போது வேகம் பிடித்துள்ளது.
'புலி' என இப்போது உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் மிக எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் கதை சரித்திர பின்னணி மற்றும் இன்றைய காலகட்டம் என இரு மாறுபட்ட காலகட்டங்களில் நிகழ்கிறது.
சரித்திர பின்னணியில் நடைபெறும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. நிகழ்கால காட்சிகளை கேரளாவில் படமாக்க இருக்கிறார்கள். பிப்ரவரி முதல் தேதியிலிருந்து கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற உள்ளது.
இப்படம் குறித்து புதிய தகவல் கிடைத்திருக்கிறது. அந்த புதிய தகவலின் படி இப்படத்தில் இடம்பெறும் சரித்திர கதையில் விஜய், தந்தை – மகனாக நடிக்கிறார். ஆக இந்தப் படத்தில் விஜய்க்கு 3 வேடங்கள்.
ஏற்கனவே விஜய், ‘அழகிய தமிழ் மகன்’, ‘கத்தி’, ‘வில்லு’ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘வில்லு’ படத்தில் விஜய்யின் தந்தையாக விஜய் ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சியில் மட்டும் வருவார். சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் தந்தை – மகன் கேரக்டர்கள் சம முக்கியத்துவமுள்ள கேரக்டர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
விஜய்யுடன் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார் என்பதும், ‘நட்டி’ நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதுதெல்லாம் எல்லோரும் அறிந்த தகவல்கள்.