434 Views
இசைப்புயல் A .R ரஹ்மான் இதயம் திறந்து தரும் பதில்கள்.
உலகத்தரத்திற்கு தமிழ்த்திரையிசை இன்று தரமுயர்ந்துள்ளது என்றால் மிகையில்லை. தரமுயர்ந்துள்ளது என்பதையும் விட உலகத்தரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதே உண்மையும் கூட. இந்த உயர்வுக்குக் காரணமானவரென விரல் சுட்டிக்காட்டுகின்ற அளவுக்கு சாதனைகளின் சொந்தக்காரர், பணிவுக்கும் பண்புக்கும் தன்னடக்கத்திற்கும் உரித்தானவர், ஒஸ்கார் நாயகன், அவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ்த்திரையுலகிற்கு பல சாதனையாளர்களைத் தந்த இயக்குனர்சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் மணிரத்னத்தின் "ரோஜா"வில் ஆரம்பித்த இசைப்புயலின் சாதனைப்பயணம் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் "ஐ" கடந்து பயணிக்கின்றது.
தென்னிந்திய தமிழ்த்திரையுலகிற்கு பல புதிய இளம் பின்னணிப்பாடகர்களை அறிமுகம் செய்கின்ற ஒரு இசையமைப்பாளர் என்பதோடு, இசைத்துறையில் திறமையானவர்களுக்கு அவர்களின் திறமைக்குரிய தகுதியை வழங்க இவர் தயங்கியதில்லை என்று சொல்லலாம். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலம் உட்பட பிறமொழித் திரையுலகிலும் தன் இசையாட்சியை நடத்துகின்றதோர் மொழி கடந்த இசையமைப்பாளர் இந்த ஏ.ஆர்.ரஹ்மான்.
இவ்வாறானதொரு சாதனை நாயகன், மலர்ந்திருக்கும் இந்தஆண்டான 2015, ஜனவரி 06-ம் திகதி தன் 48வது அகவையில் கால் பதித்திருக்கிறார். இவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நாடு கடந்து இவரின் இசையை நேசிக்கும் அத்தனை உள்ளங்களாலும் கொண்டாடப்படுகின்றது.

இது இப்படியிருக்க, தன் பிறந்தநாள் சிறப்பாக தன்னையும், தன் இசையையும் நேசிக்கும் அன்பான உள்ளங்களோடு Facebook இன் லைவ் ஸ்ட்ரீம் மூலமாக இணைந்துகொண்டு அவர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் வழங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அவ்வாறு இசைப்புயலிடம் கேட்கப்பட்ட சிறப்பான சில கேள்விகளும், அவரால் வழங்கப்பட்ட சுவாரஸ்யமான பதில்களும் உங்களுக்காக........
1.கேள்வி: "பம்பாய்" படம் போல் மீண்டும் ஒரு படத்திற்கு இசையமைக்க விரும்புகிறீர்களா?
ஏ.ஆர்.ரஹ்மான்: இல்லை. அந்த தருணம் முடிந்து விட்டது. மாற்றங்கள் நிகழ்கின்றன.
2.கேள்வி: ரசிகர்கள், "ரோஜா" மற்றும் "பம்பாய்’ படங்களின் இசையைப் போலவே இன்னமும் உங்களிடம் இசையை எதிர்பார்கின்றார்கள். இதைப்பற்றிய உங்கள் கருத்து.....?
ஏ.ஆர்.ரஹ்மான்: திரையிசை என்பது கதை மற்றும் காட்சி அமைப்பு, திரைக்கதை என்பவற்றைப் பொறுத்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது மக்களை ஓரிடத்தில் தக்க வைப்பது மிகவும் கடினம். மக்களின் இசை கேட்கும் முறையே மாறிவிட்டது.
3.கேள்வி: உங்களுக்கு தற்போதைய இந்த இணையத்துடன் கூடிய டிஜிட்டல் உலகை பிடித்திருக்கிறதா ?
ஏ.ஆர்.ரஹ்மான்: கண்டிப்பாக. அடுத்து அடுத்து நடப்பவைகளை தெரிந்து கொள்ள முடிகின்றது. மக்களின் மனநிலை பற்றியும் உடனுக்குடன் புரிந்து கொள்ள முடிகிறது.
4.கேள்வி: திரையில் உங்களை 'ஹீரோ'வாக பார்க்க ஆசை. இதற்கு உங்கள் பதில்...?
ஏ.ஆர்.ரஹ்மான்: கண்டிப்பா நோ. எனக்கு இசை போதும். மகிழ்ச்சி. ஆனாலும் வேண்டாம். ஒரு படத்திற்கு கதை எழுதுகிறேன்.நானே தயாரிக்க போகிறேன் அதுவே போதும்.ஆனால் உங்கள் கேள்வியால் நான் க்ளீன் போல்ட். நன்றி
5.கேள்வி: திரைப்படங்களுக்கு இசையமைக்கும்போது இயக்குநரின் தெரிவை (choice) ஏற்றுக்கொள்வீர்களா? அவர்களை நம்புவீர்களா?
ஏ.ஆர்.ரஹ்மான்: கண்டிப்பாக, சில நேரங்களில். அப்படி இயக்குநர் தெரிவில்(choice) வெளிவந்த பாடல் தான் சில்லென்ற ஒரு காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா அன்பே வா’. காதல் பாடல் ஆனால் சோகமாக இருப்பது போல் எனக்கு தோன்றியது. ஆனால் இயக்குநருக்கு பிடித்திருந்தது. அந்த பாடல் செம ஹிட்.

உள்ளத் தூய்மையுடன் உண்மையாய் வாழ்த்துக்கூறும் இசைப்புயலின் இசையால் வசமான இதயங்களின் வாழ்த்துக்களோடு, எம் வாழ்த்துக்களையும் இணைக்கின்றோம். இன்னும் அவர் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து இசைப்பணி செய்திட நம் நல்வாழ்த்துக்கள்.......
*கணேசமூர்த்தி ராகவன்.
2015.01.07