1,900 Views
எத்தனை பேய்ப் படங்கள் வந்தாலும் எல்லாப் படங்களும் ஓடிவிடுவதில்லை. அருந்ததி, முனி என வெகு சில படங்கள் மட்டுமே பேய் ஓட்டம் ஓடி இருக்கின்றன. இதோ… இப்போது… காஞ்சனா-2. திரையிட்ட தியேட்டர்களைவிட கூடுதல் தியேட்டர்களில் பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது – காஞ்சனா -2.
ஏறக்குறைய காஞ்சனா-2 படத்தைப் போலவே இன்னொரு பேய்ப்படமும் விரைவில் வரவிருக்கிறது. சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிப்பில் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கி உள்ள கோப்பெருந்தேவி படம் தான் அது. ‘அருந்ததி’ பாதி ‘காஞ்சனா-2’ பாதி சேர்த்து செய்த கலவை போல் ‘கோப்பெருந்தேவி’யின் first look பயமுறுத்துகிறது.
சிலந்தி படத்தை தயாரித்த சங்கர், தனது பெயரை ஹ்ருஷிகேச அச்சுதன் சங்கர் என்று மாற்றிக் கொண்டு தயாரித்து இயக்கி உள்ள கோப்பெரும்தேவி படம் கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மாண்டமானமுறையில் தயாராகியது.
ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளன. கோப்பெருந்தேவி படத்தை பிரம்மாண்டப்படுத்த இருபது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. பேய்ப்படங்களில் பேய்தான் பிரதானம் என்பதால் கதை என்று சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.
இந்தப் படத்தில் எப்படி?
“இது பேய்ப் படம் என்றாலும், அதில் உண்மை சம்பவங்களும் உண்டு. இது ஒரு வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம். அடர்ந்த காட்டுக்குள் ஒரு பழைய ஜாமீன் மாளிகையில் பிரம்மாணடமான புதையல் இருக்கிறது. அந்த புதையலை பயங்கரமான பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது.
இது தெரியாமல் புதையல் எடுக்கக் கிளம்பும் நகைச்சுவைப் பட்டாளம் பேயிடம் மாட்டி என்ன பாடுபட்டார்கள் என்பதை நகைச்சுவையுடனும் திரில்லுடனும் சொல்வதே கோப்பெருந்தேவியின் மையக்கதை.
கோப்பெருந்தேவி படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்ற யாரும் தனியாக கிடையாது. எல்லாமே பேய்தான். ஆராதியா என்ற புதுமுகம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கோவை சரளா, ஸ்ரீமன், இளவரசு, ஊர்வசி, வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி, தேவதர்ஷினி, பாண்டு உட்பட ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
கோப்பெருந்தேவி படம் பார்க்க வரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் படத்தின் நோக்கம். பயத்துடன் சிரிப்பார்கள் என்பதுதான் படத்தின் ஸ்பெஷல்.” ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ். எம். பிரசாந்த் இசையமைத்துள்ளார். இவர் ஏ ஆர் ரகுமானின் இசைக்கல்லூரி மாணவர்.
கோப்பெருந்தேவி படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது.
=== CASTRO RAHUL ===