தேர்தல் முறை மாற்றம் உள்ளிட்ட சில யோசனைகள் அடங்கிய 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் தினம் தொடர்பாக இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ள விசேட சந்திப்பின் போது இது பற்றி கலந்தாசிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன..
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பிற்காக அரசியல்கட்சிகள் அனைத்தினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாளை மறுதினம் 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக சிறு கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் நேற்று மாலை விசேட சந்திப்பு இடம்பெற்றது.
புதிய தேர்தல் முறை அமுலாக்கல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாக்கம் செலுத்தாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் எமது செய்திச் சேவைக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.