சூர்யாவின் நடிப்பில் நயன்தாராவும் இணைந்து ஜோடிபோட்டு கலக்கியிருக்கும் திரைப்படமாகவும், அனைவரினதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படமாகவும் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்.
இதன் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி இந்தப்படம் திரை காண்கிறது. மாஸ் மாஸாக வந்து மக்கள் மனங்களை கொள்ளை கொள்கிறதா என்பதை அறிந்து கொள்ள முன்னம், வெங்கட்பிரபு தனது அடுத்த படத்தின் வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்.
இந்தப் புதுப்படம், பெண்களை மையமாக கொண்ட படமாக வரவுள்ளது என்கின்றனர். அதிலும், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகளான நயன்தார மற்றும் த்ரிஷா ஆகியோரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க பேசப்படுகிறது. இருவரதும் திகதிகள் கிடைத்தவுடன், படத்துக்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவுள்ளதாக வெங்கட்பிரபு தரப்பு குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும், இரண்டு நாயகிகளும் சம்மதிப்பார்களா ஒன்றாய் நடிப்பதற்கு என்று ஒரு தரப்பு கேள்வி கேட்டாலும், இன்னொரு தரப்பு சொல்கிறது, இவர்கள் வெங்கட்பிரபுவுக்காக நடித்துக் கொடுப்பார்கள் என்று!
காலம் சில கழியட்டும், சரியான அறிவிப்புக்கள் மிக விரைவில் வந்து சேரும். அதையும் நாமே முந்தித் தருவோம்.
-கோடம்பாக்கக் குருவி-