எதிர்வரும் 2020 ஆண்டில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி அறிவிப்பை, ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டன் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சந்தேகமின்றி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவர் அதிர்ச்சித் தோல்வியை தழுவி இருந்தார். ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைவார் என்பதை அதுவரை அதிபராக இருந்த பராக் ஒபாமாகூட இதனை எதிர்பார்க்கவில்லை.
அதிகூடுதலான எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்கா அதிபர் தேர்தலில் தோல்வி அடைய, டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தெரிவானார். அமெரிக்க வரலாற்றில், ஒரு பெரிய அரசியல் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வான முதல் பெண்மணியும் ஹிலாரியே.
தேர்தல் கணிப்புகள் ஹிலாரியின் பக்கம் இருந்தாலும் முடிவுகள் அவருக்கு எதிராக இருந்தமை இன்றும் அதிர்ச்சியே. இந்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்த ஹிலாரி கிளிண்டன், தேர்தலில் தோற்றாலும் தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன் என்று அறிவித்தார். எதிர்வரும் ஆண்டு தேர்தலுக்காக அமெரிக்கா தயாராகி வரும் நிலையில் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்குப் செவ்வி வழங்கிய ஹிலாரி, நான் எதை நம்புகிறேனோ அதற்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். அதுகுறித்துப் பேசுவேன் என்றுள்ளார்.
மேலும், நாட்டில் இப்போது நடக்கும் சம்பவங்கள் என்னை மிகுந்த சங்கடத்துக்கு ஆளாக்குகின்றன. 2020 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. ஆனால் அதற்காக எங்கும் போய்விடமாட்டேன். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களாகப் போட்டியிட எண்ணுபவர்களிடம் பேசி வருகிறேன். ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலே நீளமாக இருக்கிறது. அதுகுறித்துப் பேசுங்கள் என்று கூறியுள்ளேன்'' என்றும் ஹிலாரி தெரிவித்துள்ளார்.