கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தெரியாதவர்கள் இல்லை. அந்தளவிற்கு பேராசிரியர் ஒருவரின் நடவடிக்கை ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் முறையில் அவர் ஈடுபட்ட போது, அவருடன் உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இவர்களில் நிர்மலாதேவியை தவிர மற்றைய அனைவரும் பெரும் போராட்டத்தின் பின்னர், பிணை பெற்றிருந்தார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர் என்றும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று பிற்பகல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு நிர்மலா தேவி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில், இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு எவ்வித பேட்டியும் நிர்மலாதேவி வழங்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் நிர்மலா தேவி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.