துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர நியூஸிலாந்து அமைச்சரவை உடன்பட்டுள்ளது.
துப்பாக்கி விதிகளைக் கட்டுப்படுத்தி புதிய மாற்றங்களை ஏற்படுத்த நியூஸிலாந்து அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜேசிந்தா அர்டன் (Jacinda Ardern ) கூறும்போது, ''துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த மாற்றம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை கூடுவதற்கு முன்னதாக செயல்படுத்தப்படும். இதுதான் செயல்படுவதற்கான நேரம்'' என்று குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் நியூஸிலாந்து துணை பிரதமர் வின்சென்ட் பீட்டர்ஸ் (Winston Peters ) கருத்து வெளியிடும்போது, ''நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்'' என்று கூறினார்.
நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் (Christchurch ) நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவேளையில் அங்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக அங்கிருந்த அனைவர் மீதும் துப்பாக்கி சூட்டை பிரயோகித்தார்கள். இதில் 50 பேர் பலியாகியதுடன் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கடும் காயங்களுக்கு இலக்காகினார்கள்.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் சூத்திர தாரியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.