விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "மிஷன் சக்தி" எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. விண்வெளியில் 300 KM தொலைவில் உள்ள செயற்கைக்கோளை வெறும் 3 நிமிடத்தில் அழித்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விண்வெளியில் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை இதுவரை காலமும் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்திருந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. மிஷன் சக்தி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டமை தொடர்பில் நேற்று உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, மிஷன் சக்தி என்ற இந்த சோதனை வெற்றி பெற ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், விண்வெளித் துறையில் உயர்ந்த நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
இந்த நடவடிக்கை நமது செயற்கைக்கோள்களை பாதுகாக்க மாத்திரமே தவிர, எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளது. சீனா கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் வெற்றிகரமான சோதனை தொடர்பான அறிக்கையை நாங்கள் கவனித்தோம். விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது போன்று பாகிஸ்தான் கருத்து தெரிவிக்கையில், விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது. விண்வெளியில் ஆயுத போட்டியை தடுப்பது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது.
எனவே, கடந்த காலங்களில் இதேபோன்ற சோதனையை பிற நாடுகள் செய்தபோது கண்டித்த நாடுகள் எல்லாம், விண்வெளிக்கான ராணுவ அச்சுறுத்தலை தடுக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.