வெப்பமான காலநிலை இலங்கையை மட்டுமன்றி இந்தியாவையும் ஆக்கிரமித்து வருகின்றது. இலங்கையில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் மக்கள் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்பமான காலநிலை காரணமாக பலரும் அதிகளவில் நீரை அருந்துவது, காரமான உணவுகளை தவிர்த்து, நிழலான பிரதேசங்களில் தங்குவதும் அவதானிக்கூடியதாக உள்ளது.
இப்படியான வெப்பமான காலநிலை காரணமாக கொல்கத்தாவில் ஒருவர் தனது ஆட்டோ ரிக்ஷாவின் மேல்பகுதியில் தோட்டம் வளர்த்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்து வருபவர் பிஜோய் பால் தனது ஆட்டோவில் ‘மரங்களை பாதுகாத்து உயிர்களை காப்பாற்றுங்கள்’என்ற பொன்மொழி வாசகங்களை எழுதி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். அத்தோடு நின்றுவிடாமல் தனது ஆட்டோ ரிக்ஷாவின் மேற்பகுதியில் புல்வெளி மற்றும் அழகிய பூச்செடிகளுடன் சிறிய தோட்டம் ஒன்றையும் அமைத்து பராமரித்து வருகிறார்.
மக்களிடையே பசுமையின் தேவைக்கான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், இவர் செய்துவரும் இந்த பிரசாரம் பலரையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இவர் ஆட்டோ ரிக்ஷா Like , share என்று அதிகமானவர்களை ஈர்த்து வருகின்றார்.
வெறும் பசுமை முயற்சியாக மட்டும் இல்லாமல் இந்த கோடைக்காலத்தில் ஆட்டோவில் அமர்ந்துவரும் பயணிகளுக்கு புதுமையான முறையில் குளிர்ச்சியை அளிக்கும் வகையில் பிஜோய் பால் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சிக்கு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.