திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தாலும் சமூக அக்கறையும், பொதுநலன் சார்ந்த கருத்துக்களையும் தனது நகைச்சுவை காட்சிகளில் புகுத்தி மக்களிடையே பகுத்தறிவு சிந்தனையை விதைப்பவர் 'ஜனங்களின் கலைஞன்' என்ற பெருமை பெரும் சின்னக்கலைவாணர் நடிகர் விவேக்.
தற்போதுவரை நடிகராக திரைத்துறையில் வலம் வந்துகொண்டிருக்கும் விவேக், வெகு விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோது, "மிக விரைவில் திரைப்படமொன்றை இயக்கம் தீர்மானத்தில் உள்ளேன். அதற்கான வேலையில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளேன். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்கருவில் அமைந்த நகைச்சுவைப் படமாக எனது படம் திரை காணும். முன்னணி கதாநாயகர் ஒருவரையே எனது படத்தில் நடிக்கவைத்து இயக்குவதற்கு முடிவு செய்துள்ளேன்" என்கிறார் விவேக்.
இது இப்படியிருக்க, தற்போது வெளிவரும் திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் பஞ்சம் ஏற்பட்டது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுகின்றதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன......? என்று அவரிடம் கேட்டபோது, " வடிவேலு மற்றும் நான் நடிக்கும்போது படங்கள் இரண்டரை மணி நேரத்தை தாண்டிய நீளம் கொண்டவையாக இருந்தன. அந்தப் படங்களில் எங்களது நகைச்சுவைக்காக தனி டிராக் கிடைக்கும். ஆனால் இப்போது ஒரு படத்தை பார்க்க வைப்பதற்கு இரண்டு மணி நேரம் ரசிகர்களை அமர வைப்பதே பெரும் பிரயத்தனமாக உள்ளது. படங்களின் காட்சி நேரம் குறைவாகவே உள்ளதால், முன்னர் போன்று நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை" என்று மன வருத்தப்பட்டார் 'சின்னக் கலைவாணர்' நடிகர் விவேக்.