ஜி.வி.பிரகாஷ்குமார் தானே படத்திற்கான இசையமைக்கும் பணியையும் ஏற்றிருந்த நிலையில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ள இந்தப் படத்தில் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கலக்கியுள்ள நிலையில், "குப்பத்துராஜா" மூலம் நடன இயக்குனரான பாபா பாஸ்கர் திரைப்பட இயக்குனராக அவதாரமெடுத்திருக்கின்றார்.
"குப்பத்து ராஜா" படத்தில் ஜி.வி பிரகாஷிற்கு ஜோடி சேர்ந்து நாயகியாக பாலக் லால்வானி எனும் தமிழிற்கு இறக்குமதியான நடிகை ஒருவர் நடித்துள்ளார். இது பற்றி நடிகை பாலக் லால்வானி கூறுகையில், "இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நான், முதல் நாள் படப்பிடிப்பில் அதிக பதற்றத்துடன் இருந்தேன். ஏனெனில், இந்தக் கதை லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியா தமிழைப் போன்று பேசி நடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட இயக்குனர் என்னிடம் பொறுமையாகப் பேசி, எனக்கான வசனத்தை சொல்லி கொடுத்தார்.
சென்னை புறநகர்ப் பகுதியைக் களமாகக் கொண்ட கதையான இந்தப் படத்தில், நானும் அந்தப் பகுதியில் வாழும் பெண்ணின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றேன். அதனால், எனது நடிப்பு எல்லோராலும் சிறப்பாகப் பேசப்படும். நான், படத்தில் சும்மா வந்து போகும் கேரக்டராக இருக்காது’ என்று நம்பிக்கையுடன் முகம் மலர்கின்றார் இந்த வடநாட்டு வரவு.