திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான 'சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்' தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் "மாளிகை". பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் தில். சத்யா இயக்க, தயாரிப்பாளர்கள் கமல்போரா மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் கூட்டாகத் தயாரித்துள்ள நிலையில், படத்தின் முன்னோட்டக்காட்சி (Teaser) வெளியீட்டு நிகழ்வு அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது.
மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று நிறைவடைந்த இந்த விழாவில், நடிகரும் பிரபல இசையமைப்பாளருமான விஜய் அன்டனி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அவரும் விழாவில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் "மாளிகை" படம் பற்றி அவர் கூறுகையில், "நான் இதுவரை கலந்துகொண்ட திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பொசிட்டிவாக உள்ளது.
இந்தப் படத்தின் திரைக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். 'சகலகலாவல்லி' ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குனருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்று மனம் திறந்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் விஜய் ஆண்டனி.