வல்லரசு நாடுகள் உட்பட ஆசியாவின் பல நாடுகளாலும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்.
இம்முறை 7 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும் இந்தத் தேர்தலானது, கடந்த 11 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி வரை நடைபெறும் நிலையில், இன்றையதினம் தமிழ்நாடு உட்பட்ட 12 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுகின்ற நிலையில், சாதாரண மக்களிற்கு முன்னுதாரணமாகவுள்ள பல துறைகளையும் சார்ந்த பிரபலங்கள் காலை வேளையிலேயே வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவாக, இன்றையதினம் 12 மாநிலங்களின் 96 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் தமது வாக்குப்பதிவை மக்கள் மேற்கொள்கின்றார்கள். இருந்தும், ஒரு சில தேர்தல் முறைகேடுகள் காரணமாக வேலூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இந்திய தேர்தல் ஆணையகத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், புதுச்சேரி தொகுதிக்கான வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது.
தம்மை யார் ஆள்வது என்ற அதிகாரத்தை, தேர்தல் வாக்கு எனும் தமது உரிமையின் மூலம் தீர்மானிக்கும் மக்கள், காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக வாக்களிப்பதாக தமிழ்நாட்டுச் செய்திகள் வெளியாகின்ற நிலையில், சரியாக 7 மணியளவில் ஆரம்பித்த வாக்குப் பதிவில் பங்கேற்ற திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமது வாக்களிப்பை நிறைவு செய்துள்ளதாக புகைப்படங்களுடன் இணைந்த செய்திகளை இணையத்தளங்கள் வெளியிடுகின்றன.
இந்தநிலையில், 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் தனது வாக்களிப்பு நிலையமான ஸ்ரெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்களிக்கும் கடமையினை நிறைவு செய்ததுடன், மற்றவர்களையும் வாக்களிப்பில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்களிக்கும் உரிமை பெற்ற அனைவரையும் அன்பாக வேண்டிக்கொண்டார்.
அதேவேளை,திருவான்மியூரில் உள்ள ஒரு பாடசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்களிப்பு நிலையத்திற்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்த 'தல' அஜித் தனது வாக்கினை பதிவு செய்து சென்றதுடன், அவர் வரும்போது காவல்துறையினர் அவருக்கு பாதுகாப்பும் வழங்கியிருந்தனர்.
இது இப்படியிருக்க, 'தளபதி' விஜய் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக, நீலாங்கரையில் உள்ள ஒரு வாக்களிப்பு நிலையத்தில் மக்களோடு சேர்ந்து வரிசையில் காத்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், "மக்கள் நீதி மய்யம்" கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் அவரது மக்கள் ஷ்ருதி ஹாசனும் தேனாம்பேட்டையிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்கினை பதிவு செய்துவிட்டு சென்றதாகவும், கமல் வாக்களிக்க வந்த வேளையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்ட காரணத்தால் அவர் குறித்த இயந்திரப் பழுது சீர்செய்யப்படும்வரை காத்திருந்து வாக்குப்பதிவினை மேற்கொண்டுவிட்டே சென்றதாகவும் தமிழக செய்திகள் சொல்கின்றன.
அத்துடன் ஒஸ்கார் நாயகன் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் காலை வேளையிலேயே தனது வாக்கு பதிவினை மேற்கொண்டதுடன் நடிகை குஷ்பு உள்ளிட்ட நடிக நடிகையர்கள் பெருமளவானோர் தமது வாக்களிப்பு கடமையினை காலை வேளையிலேயே நிறைவு செய்து முன்னுதாரணமாக நடந்துகொண்டனர் என்று சொல்கின்றது சென்னையிலிருந்து கிடைத்த தகவல்.