"விஸ்வாசம்" திரைப்படம் தந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் முடித்திருக்கும் 'தல' அஜித், தன்னுடைய "தல 60" என்ற மற்றுமொரு புதிய படத்திற்கான பணியில் மிக மும்முரமாக இறங்கியுள்ளார்.
அஜித், "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தை முடித்துக் கொடுத்துள்ள நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதற்கான வேலைகளை தயாரிப்புத் தரப்பு அதிசிரத்தையாக மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தனது கடமையை சரிவர முடித்துக் கொடுத்த திருப்தியுடன் மீண்டும் அதே இயக்குனருடன் புதிய படத்திற்கான கூட்டணியில் கை கோர்த்திருக்கின்றார் தல.
ஹிந்தித் திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆக தமிழில் படமாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கிக் கொடுத்துள்ள நிலையில், வினோத் தனது சொந்தக் கதை ஒன்றையே "தல 60" என்ற இன்னும் பெயர் குறிப்பிடாத படமாக அஜித்தை வைத்து இயக்கவுள்ளார். இதன் காரணமாக, புதிய படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவகையில் தனது உடற்கட்டமைப்பை மெருகேற்றும் பயிற்சியில் 'தல' அஜித் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தள பக்கம் ஒன்றில் சந்தோசமாக பதிவிட்டிருந்தார். அவ்வாறு பதிவிட்ட புகைப்படத்தில் உடற்பருமன் குறைந்து ஸ்லிம் ஆன தோற்றத்துடன் கூடிய இளமையாக அஜித் காணப்படும் நிலையில், "தல 60" திரைப்படமும் ஒரு ஆக்க்ஷன் திரைப்படமாகத்தான் வெளிவரும் என்று அடித்துக்கூற ஆரம்பித்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.