இயக்குனர் விக்னேஷ் சிவனுடனான காதல் உறவு நெருக்கமடைந்ததன் பின்னர் அதிக மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை நயன், விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் விருது நிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்திருந்தார்.
குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நயன்தாரா, "ரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.
உங்கள் பெற்றோர், வாழ்க்கை துணை, துணையாக போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம். புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும். நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி. வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஹீரோயின் படங்கள் வருவது பெருமையாக இருக்கிறது. சமூகவலைதளங்களில் எதிர்மறை செயற்பாடுகள் அதிகமாக உள்ளன. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? எனக்கு கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை" என்கிறார் நடிகை நயன்தாரா.