ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் பின்னணி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி கடின உழைப்பால் இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் . இவர் நடன கலைஞர், இயக்குநர், நடிகர் என தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென இரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இதனிடையே, சினிமாவை தாண்டி ஏழை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சொந்த செலவில் மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு உதவி வருவதன் மூலம் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
தற்போது சொந்த தயாரிப்பில் ‘காஞ்சனா 4’ திரைப்படத்தை உருவாக்கி வரும் நிலையில் , அடுத்ததாக தன் மகள் ராகவி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகவி அமெரிக்காவில் திரைப்பட உருவாக்கம் சார்ந்த படிப்பை முடித்துள்ளார் என்பதுடன் தற்போது இயக்குநராகத் தன் திரைப்பயணத்தைத் தொடங்க அவர் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.