இசைக் கலைஞரும், பின்னணிப் பாடகியும், நடிகையுமாகத் திகழும் நடிகை ஸ்ருதிஹாசன், 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனது தந்தையின் Super Hit பாடல்களைத் தொகுத்து,அதனைத் தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களைக் கவர்ந்துள்ள நிகழ்வு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகின்றது.
தனது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது, இசை வெளியீட்டு விழாவை மேலும் சிறப்பாக்கியுள்ளது.
ஸ்ருதிஹாசன், தனது மகிழ்ச்சியினை இரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக,காணொளி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களைத் தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தைப் பெறும் போது அவரை கமல்ஹாசன், ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தினார்.
மேலும் இது தொடர்பான சில புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
இந்நிகழ்வில் ஸ்ருதிஹாசன், ''என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதனை நிகழ்த்துவது எனக்குப் பெருமை. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகரச் சிரிப்பைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்'' என்று உணர்வுபூர்வமாகப் பேசியிருந்தார்.
இந்நிகழ்வில், அனிருத், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோர் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றி இந்த நிகழ்வை இன்னும் சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.