ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏனெனில் அவருடைய உடல், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை என்றும் கைஃப் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இது பற்றி தன்னுடைய X பக்கத்தில் அவர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஓய்வைக் கூட அறிவிக்கலாம். அவர் தன்னுடைய உடலால் தடுமாறுகிறார்.
அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. அதனாலேயே மன்செஸ்டர் போட்டியில் அவருடைய வேகம் குறைந்து விட்டது. இருப்பினும் அவர் சுயநலமற்ற நபர், நாட்டுக்காக தம்மால் 100% முயற்சிகளைக் கொடுக்க முடியவில்லை, போட்டிகளை வெல்ல முடியவில்லை, விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்று பும்ரா கருதினால், அவர் தொடர்ந்து விளையாட மறுப்பார் என்பதே என்னுடைய உறுதியான உணர்வாகும்.
அவருடைய வேகம் 125 – 130 அளவுக்கு குறைந்துள்ளது. அவருடைய ஆர்வம் அப்படியே இருந்தாலும் உடற்தகுதியை இழந்துள்ளார். அவருடைய உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. இப்போட்டியில் அவருடைய சுமாரான பந்துவீச்சு அவரிடம் பிரச்சினை இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.
விராட், ரோஹித், அஸ்வின் சென்றார்கள். தற்போது பும்ரா இல்லாமலும் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க இந்திய இரசிகர்கள் பழகிக்கொள்ள வேண்டும். இருப்பினும் என்னுடைய இந்தக் கணிப்பு தவறாக வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.