ஒரு போரின் வரலாறு!
SOORIYAN GOSSIP - ஒரு போரின் வரலாறு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
இந்த உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோத இருக்கின்றன. இது வெறும் கால்பந்து போட்டி மட்டுமல்ல; இது அறுபது ஆண்டுகளுக்கும் மேலான கசப்பான வரலாறு, என்பது உங்களுக்குத் தெரியுமா?
அரசியல் பின்னணி மற்றும் மறக்க முடியாத சர்ச்சைகள் நிறைந்த ஒரு வரலாற்று மோதலாக இன்றளவும் நீடித்து தொடர்ந்து வருவதுதான் ஆர்ஜன்டினா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான மோதல்.
1966 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து வீரர் பாபி சார்ல்டன் மற்றும் ஜிப் ஹர்ஸ்ட் ஆகியோர் மீது அர்ஜென்டினா அணித் தலைவர் அன்டோனியோ ராட்டின் மேற்கொண்ட ஆக்ரோஷமான ஆட்டம், அப்போதைய இங்கிலாந்து மேலாளர் ஆல்ஃப் ராம்ஸேவை அர்ஜென்டினா வீரர்களை "விலங்குகள்" என்று விவரிக்க வழிவகுத்தது. இந்தச் சம்பவமே கால்பந்து வரலாற்றில் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை முறையை அறிமுகப்படுத்தக் காரணமாகவும் அமைந்தது.
இந்தக் கசப்பான பகைமை உணர்வு, 1982 ஆம் ஆண்டு பாக்லாந்து தீவு தொடர்பான போர் காரணமாக மேலும் தீவிரமடைந்தது.
1986 உலகக் கிண்ண காலிறுதியில், டியேகோ மரடோனா தனது கையைப் பயன்படுத்தி கோல் அடித்தது கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதனை அவர் "கடவுளின் கை" என்று அழைத்தார். இது இங்கிலாந்து வீரர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாக இன்றும் இங்கிலாந்து இரசிகர்களால் தூற்றப்படுகிறது.
தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில், டேவிட் பெக்காம் மற்றும் டியேகோ சிமியோன் இடையிலான மோதலால் பெக்காம் சிகப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அது இங்கிலாந்தின் தோல்விக்கு வழிவகுத்தது.
இதற்குப் பழிவாங்கும் விதமாக, 2002 உலகக் கிண்ணப் போட்டியில், பெக்காம் பெற்ற பெனால்டி கோல் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்று ஒருவிதமான நிம்மதியைப் பெற்றது. அதே வெற்றி அதே நிம்மதி இம்முறையும் இங்கிலாந்து எதிர்பார்க்கக் கூடும்.
இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா இடையிலான நாளை இடம்பெறபோகும் இந்த மோதல் என்பது வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படாமல், நாட்டுப்பற்று மற்றும் கௌரவப் போராட்டமாகவே பல ஆண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இந்த தீராப் பகையை யார் தீர்ப்பார்? நாளை தெரிந்துவிடும்.