திரையுலகில் மக்கள் மனதை வெல்லவும், சாதிக்கவும் வயது ஒரு தடையில்லை என ஜெயித்துக் காட்டியவர் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 30வயதிற்குப்பின் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மூலம் தமிழ்சினிமாவில் காலடி பதித்து, தற்போதுவரை 30வருடங்களுக்கு மேலாக ஜெயித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில் 2014 நடப்பு ஆண்டிற்கான இந்திய மத்திய அரசின் சிறந்த விருது ஒன்று இவருக்கு வழங்கப்படவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தமாதம் 20ம்திகதி தொடக்கம் 30ம் திகதி வரையான 11நாட்கள் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்படவிழா நடக்கவிருக்கிறதாம். இந்த விழாவில் வைத்தே சிறந்த திரையுலகப் பிரமுகருக்கான நூற்றாண்டு விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பிரதம விருந்தினராக அமிதாப் பச்சன் கலந்துகொள்ளவுள்ளதோடு, இந்தியா முழுவதுமுள்ள நடிகர் நடிகைகள், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளப் போகின்றார்களாம்.
தென்னிந்திய திரையுலகத்தை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களுக்கிடையே தான் ரஜினிகாந்த் இந்த விருதுக்கு இந்திய மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம்.
ஆளும் மத்திய அரசான பா.ஜ.க தமிழகத்தில் தனது ஆட்சியை கொண்டுவரும் நோக்கில் சூப்பர்ஸ்டார் ரஜினியை தனது கட்சியில் சேர்த்துக்கொள்வதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததையும், ரஜினியும் பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டிருந்த விசயங்களை சொல்லியிருந்தோம். தற்போது பா.ஜ.க மத்திய அரசாக இருக்கும் நிலையில், இந்த விருதுக்கான ரஜினியின் பெயர் தேர்விலும் அரசியல் காரணங்களே செல்வாக்கு செலுத்துவதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
இதுக்குத் தான் ஊரில ஒரு பழமொழி சொல்லுவாங்க. "சோழியான் குடுமி சும்மா ஆடாதாம்..."
*கணேசமூர்த்தி ராகவன்.