கெளதம் மேனனின் இயக்கத்தில் ‘தல’அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படம் “என்னை அறிந்தால்”. இந்தப்படம் பற்றிய நிறைய செய்திகளை ஏற்கனவே தந்திருந்தோம். இந்த நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்க, எதிர்வரும் 29-ம் திகதிக்கு தள்ளிப்போயிருக்கிறது இதன் திரை வெளியீடு.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க பெரும் பொருட்செலவிலும், சீயானின் கடின உழைப்பிலும் வெளியாகும் படம் தான் "ஐ". பொங்கலை முன்னிட்டு இந்தப்படம் வெளியாவதால், "ஐ" படத்தின் வெற்றியிலும், வசூலிலும் பாதிப்பு ஏற்படாதிருக்கவே ‘தல’அஜித் பெருமனதோடு தான் நடித்த “என்னை அறிந்தால்” படத்தை எதிர்வரும் 29-ம் திகதிக்கு பிற்போட்டிருப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் சொல்கின்றன.
இது இவ்வாறிருக்க, “என்னை அறிந்தால்” படத்தின் கிளைமாக்ஸ் பற்றிய, ‘தல’ ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் புதியதொரு செய்தி வெளியாகியிருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சி பற்றி எதுவுமே அஜித்திடம் சொல்லாமலேயே ஏனைய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டது. அஜித்தும் அதைப்பற்றி எதுவுமே கேட்காமலேயே ஏனைய அனைத்துக் காட்சிகளிலும் நடித்து கொடுத்திருந்தார் என்பது பற்றி எல்லாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். இந்தநிலையில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டு, காட்சி எப்படி அமைக்கப்படுமென அஜித்திடம் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது. அதைக்கேட்ட அஜித் அதிர்ச்சி அடைந்ததோடு, உடனடியாக மறுப்புத் தெரிவித்திருக்கிறாராம். கிளைமாக்ஸ் பற்றி எதுவுமே சொல்லாமல் படப்பிடிப்பு நடத்திய கெளதம் மேனன், இறுதிக் காட்சியில் ‘தல’அஜித் இறந்து விடுவது போல கதைஉருவாக்கியிருந்தாராம். இந்தக் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்குவதற்காக அஜித்திடம் இயக்குனர் விளக்கிக்கூறும்போதே அஜித் உடனடியாக அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

இயல்பாகவே தனது கதையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள இயக்குனர் கெளதம் மேனன் விரும்புபவரல்ல. அவரும் தான் வைத்த கிளைமாக்ஸ் காட்சியே படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், அதனையே படமாக்கவேண்டுமென விடாப்பிடியாக இருந்துள்ளார். இவ்வாறு முரண்பட்ட நிலையில் இருவரும் இருந்தநிலையில், இயக்குனர்களின் முடிவுகளில் பெரிதும் தலையிடாத நடிகர் என்ற பெருமைபெற்ற ‘தல’அஜித் இந்த அதிருப்திக்கான தெளிவான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். படத்தில் நான் இறப்பது போல காட்சி வைத்தால் அதனை என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனாலேயே தான் இந்த கிளைமாக்ஸ் காட்சியை வைப்பதை விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார்.
அத்தோடு, இந்தப்படம் முழுதும் அஜித்தை மையப்படுத்தியே நகர்வதாலும், ஹீரோவுக்கான கதையாக மட்டும் இது உள்ள நிலையில், அஜித் இறுதியில் இறந்து விடுவது போன்று கிளைமாக்ஸ் வைக்கப்பட்டால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினியின் “தளபதி” படத்திலும் ரஜினி இறுதியில் இறந்து விடுவது போன்றே இயக்குனர் மணிரத்னம் முதலில் கிளைமாக்ஸ் வைத்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றினார். அதனால் இந்த கிளைமாக்ஸ் சரியாக அமையாது என படக்குழுவினரும் கருத்துக் கூறியிருக்கிரார்களாம்.
இது இப்படியிருக்க, இந்தப்படத்தின் விநியோகஸ்தர்களும் தம் பங்குக்கு, கெளதம் மேனனுக்கு எதிராக கருத்துச் சொல்லியிருந்தார்களாம். தொடர்ந்து பல படங்கள் தோல்வியால் உடைந்துபோயிருந்தவர் இந்தக் கெளதம் மேனன். அவருக்காக கை கொடுத்தவர் 'தல'அஜித். அவருடைய பேச்சையே இப்போது கேட்க மாட்டேன் என்கிறாரே இந்த இயக்குனர் என எதிர்ப்புக் கிளப்பியிருக்கிறார்கள்.
இந்தநிலையில், தான் வைத்த கிளைமாக்ஸ் காட்சிக்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புக்குமேல் எதிர்ப்பாக இருந்ததனால், இயக்குனர் கெளதம்மேனன் மேலும் தன் பிடிவாதத்தைத் தொடராமல் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி படமாக்கினார் எனவும் தென்னிந்திய தமிழ் சினிமாத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
எதையும் மாற்றுங்கள்……… படம் பார்க்கவரும் எங்களை மட்டும் ஏமாற்றாதீர்கள் - கெளதம்மேனனிடம் ரசிகர்கள்.
*கணேசமூர்த்தி ராகவன்.