ஹீரோ இல்லைன்னா கதையே இல்லைப்பா என்கிற அளவுக்கு நம்ம தமிழ் சினிமாவில், ஒன்றுக்கு பல பேரைப் போட்டு படத்தை ஓட்டப் பார்ப்பார்கள். இங்கு மட்டுமல்ல, எல்லா சினிமாவிலும் ஆண்களை நம்பி போடப்படும் முதல் தான் அதிகம்.
தமிழில் ஒரு சில படங்கள் பெண்களை களமிறக்கி வந்தன. அவை வெற்றிகளை எந்தளவுக்கு பெற்றன என்பது கேள்விக்குறிதான். இறுதியாக சிநேகிதியே வெளியானது. அதன்பிறகு, யாரும் இப்படியான தைரியத்தோடு களமிறங்கவில்லை. வீணாக, கருத்துச் சொல்லப் போய் ஏன் கையைச் சுட்டுக் கொள்வான் என அமைதியாய் வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படியாக இருந்த தமிழ் சினிமாவில், யாமிருக்க பயமேன் என்று ஒருவர் பெண்களை மட்டும் வைத்து இயக்கம் படத்தோடு குதித்துள்ளார். அவர், மலையாளத்தில் முப்பதுக்கும் அதிகமான படங்களை இயக்கிய துளசிதாஸ். இனிவரும் நாட்கள் என்று பெயரிட்டுள்ளார்.
ஆர்த்தி, இனியா, சுபிக்ஷா, ஈடன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கியமான பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் முன்னைய நாயகி நதியா நடிக்கிறார். முழுக்க முழுக்க பெண்களே கரம் கோர்த்திருக்கிறார்கள் . எந்த ஆண் பாத்திரமும் படைக்கப்படவில்லை.
படத்தினை ஆட்சி செய்வது பெண்கள் மட்டும்தான். மற்றும்படி ஹீரோ என்றால் திரைக்கதை தான் என்று சந்தோஷமாக சொல்கிறார் இயக்குனர் துளசி தாஸ்.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-