தமது பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட முறுகல் நிலை அதிகரித்து, தந்தையொருவர் வீட்டுக்கு தீவைத்துள்ள சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது.
தமது பிள்ளைகள் மற்றும் மனைவியும் வீட்டில் இருப்பதாக எண்ணி நேற்று இரவு 9.00 மணியளவில் குறித்த நபர் வீட்டுக்கு தீவைத்துள்ளார்.
சிலாபம் - அளுத்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ள நிலையில், படகு இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நபரின் மகள் தெரிவித்துள்ளார்.
இதற்காக தனது தந்தை மேலும் ஒரு நபரின் உதவியையும் பெற்று கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்திற்கு பின்னர் சிலாபம் நகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீப்பரவலை அணைத்துள்ளனர்.
இந்த தீப்பரவல் அணைக்கப்படாமல் இருந்திருந்தால் அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டிருக்கும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவலால் வீட்டுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சேத விபரம் இதுவரை அறியப்பிடவில்லை.
சிலாபம் காவல்துறை சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.